தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
மீனவர்
விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி பகுதியை சேர்ந்தவர் தொம்மை அந்தோணி (வயது 30) மீனவர். இவருடைய மனைவி குணசீலி.
இவர்களின் வீட்டிற்கு எதிர் வீட்டை சேர்ந்தவர் மைக்கேல் சாமி (48). இவர் தொம்மை அந்தோணி வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் கடந்த ஒரு ஆண்டாக பன்றிகளை பட்டிப்போட்டு அதில் அடைத்து வளர்த்து வருகிறார்.
தொம்மை அந்தோணிக்கு 4 குழந்தைகள். இதில் 2 குழந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தன.
இதற்கு காரணம் வீட்டின் பின்னால் பன்றிகள் வளர்க்கப்படுவது தான் என்றும், அதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவி தனது குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்ததாக தொம்மை அந்தோணி கருதினார். இதனால் அந்த பட்டியை அகற்ற மைக்கேல் சாமியிடம் கூறி வந்தார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.
வெட்டிக் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த தொம்மை அந்தோணி தனது வீட்டுக்கு பின்னால் இருந்த பட்டியைச் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மைக்கேல் சாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று தொம்மை அந்தோணியிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த கும்பல் மீன் வெட்டும் கத்தியால் தொம்மை அந்தோணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். இதனை அறிந்த தொம்மை அந்தோணியின் தம்பி சிலுவை அந்தோணி விரைந்து வந்து தொம்மை அந்தோணியை மீட்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், தொம்மை அந்தோணி ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தார்.
2 தனிப்படை
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைக்கேல் சாமி உள்பட 7 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க விளாத்திகுளம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.