காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-23 22:30 GMT
மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பாசன தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.

கடந்த 19-ந்தேதி முதல் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் காவிரி டெல்டா பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருந்ததன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 869 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் மளமளவென குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 93.09 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 91.90 அடியாக குறைந்தது.

மேலும் செய்திகள்