நெல்லை அருகே கோர விபத்து 6 பேர் பலி அரசு பஸ்கள் -வேன் மோதல்

நெல்லை அருகே அரசு பஸ்கள் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2018-12-23 22:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே அரசு பஸ்கள் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பக்தர்கள் வேன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் இருந்து 15 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர். இந்த வேனை பள்ளத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவஞானம் (வயது 31) இயக்கினார். வேன் நேற்று அதிகாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள புலவந்தான்குளம் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த வேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ், வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சும், வேனும் லேசாக உரசிக் கொண்டன. இதையடுத்து பஸ் மற்றும் வேன் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டது. வேனில் இருந்த பக்தர்கள் கீழே இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த ஒருசில பயணிகளும் கீழே இறங்கி பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது.

பயங்கர விபத்து

அப்போது மதுரையில் இருந்து மற்றொரு அரசு பஸ் நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நின்று கொண்டிருந்த பஸ் அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஏறி நசுக்கி முன்னால் நின்று கொண்டிருந்த வேன் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சில அடி தூரங்கள் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தால் மோதிய பஸ்சின் முன்பக்கமும், நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்பக்கமும் பாதி அளவுக்கு நொறுங்கி உருக்குலைந்தன. இதனால் பஸ்சின் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர்.

6 பேர் பலி

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை மற்றும் பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பஸ்சின் கம்பிகளை அகற்றி அதற்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். சம்பவ இடத்திலேயே இறந்தவர்கள் பெயர், ஊர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. நீண்ட நேர விசாரணைக்கு பிறகே அவர்களது பெயர் விவரம் தெரியவந்தது. அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆனந்த ஜோதி மகன் அம்ஜத்குமார் மற்றும் பேச்சிமுத்து மகன் முருகன், நாகர்கோவில் தேவதாஸ் மகன் ஜீவா ரூபி, பரமக்குடி முதலூரை சேர்ந்த பாஸ்கர் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தவர்கள், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மகராஜன் மகன் பிரதீப் (26), பாளையங்கோட்டையை சேர்ந்த பொன்னையா மகன் தவசிமுத்து (47) ஆகியோர் என்பதும் தெரியவந்து உள்ளது. இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

17 பேர் காயம்

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 17 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் காளியப்பன் (84), சேர்மராஜ் (55), அன்பு (24), இசக்கிமுத்து (24), ஜெயக்குமார் (45), தங்கதுரை (40), முத்துகிருஷ்ணன் (26), வேல்முருகன் (24), அரிச்சந்திரன் (26), சைரஸ் (36), ஜெனிலஸ் (26), பாலகிருஷ்ணன் (26), சதீஷ் (21), செல்வி (32), மற்றொரு செல்வி (35), பிரபாலட்சுமி (34), கனகவல்லி (59) ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் கமிஷனர் ஆறுதல்

விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

நெல்லை அருகே நேற்று அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்