தொட்டியப்பட்டி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புக்கான கட்டிடம் கட்டும்பணி மும்முரம் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் நடக்கிறது

கரூர் அருகே முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் தொட்டியப்பட்டி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புக்கான கட்டிடம் கட்டுவதற்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2018-12-23 23:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தொட்டியப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1956-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தொட்டியப்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு உருவாக்கி, தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையை இந்த பள்ளி அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் தமிழ்-ஆங்கில மொழிப்புலமையை வளர்ப்பதற்கான வகுப்புகள், பொதுஅறிவுத்திறன் வகுப்புகள் நடத்தி தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து மாணவர்களும் பள்ளியின் நிர்வாகத்தில் பங்காற்றி வருகின்றனர். இந்த நிலையில் கணினி, எலக்ட்ரானிக் தொடுதிரை உதவியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தான் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்துவதற்கான உதவிகளை செய்ய முன்னாள் மாணவர்கள், வசதி படைத்தவர்கள் உள்ளிட்டோர் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பேரில் தொட்டியப்பட்டி தொடக்கப்பள்ளிக்கு குளிரூட்டப்பட்ட அறையில் நவீன உபகரணங்களுடன் ஸ்மார்ட் வகுப்புக்கான கட்டிடம் கட்டுவதற்காக, முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்டோர் ஆலோசனை செய்து பள்ளியின் அருகிலேயே இடம் ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் முன்னாள் மாணவர்கள், கோவையை சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்டோர் உதவியுடன் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்புக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிக்கான வேலைகளை கூட, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுழற்சி முறையில் உதவும் மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது மாணவர்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்ததோ, அதைபோல் தற்போது அரசு பள்ளிகளுக்கு தாமாக முன்வந்து பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கல்வியின் தரத்தை உயர்த்த பங்காற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக தொட்டியப்பட்டி அரசு தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி கூறுகையில்,

கிராம-நகர்புற மாணவர்கள் இடம்பெயர்ந்து கல்வி கற்கும் வகையிலான பள்ளி பரிமாற்ற திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைகிறது. அந்த வகையில் மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பின்பும், அவர்களுக்கு உதவியாக இருக்கிற வகையில் தமிழகத்தின் 234 தொகுதிகள், உலக நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்கள், 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயர்கள், தனிம வரிசை அட்டவனை உள்ளிட்டவற்றை கூடுதலாக இணைய வழியில் தகவல்களை எடுத்து மாணவர்களுக்கு சுட்டி காட்டி பாடம் நடத்துகிறோம். அந்த வகையில் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட்டு வகுப்பு கட்டிடம் கட்ட பலர் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை முன்உதாரணமாக வைத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய பலர் முன்வருவார்கள் என எதிர்பார்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்