கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
வடமதுரை அருகே குடியிருப்பு பகுதி அருகே கிரானைட் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள பிலாத்து ஊராட்சி ஆண்டிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கல் குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கல் குவாரியால் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவாரி இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
தற்போது அங்குள்ள குடியிருப்பு பகுதியின் அருகே புதிதாக கிரானைட் குவாரி ஒன்று அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கிரானைட் குவாரி அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இதனால் கிரானைட் கற்களை உடைக்க வெடி வைத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கடும் அதிர்வு ஏற்படும் என்றும், காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் என்றும் கூறி கிராம மக்கள் சுமார் 200 பேர் நேற்று ஆண்டிப்பட்டி சுடுகாடு அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரானைட் குவாரி அமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 நாட்களில் இந்த பிரச்சினை தொடர்பாக அமைதிகூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.