இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதற்காக திருச்சியில் ராட்சத பலூனில் பறந்து ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு பொதுமக்கள் கண்டு வியப்பு
ராணுவத்தில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதற்காக திருச்சியில் ராட்சத பலூனில் பறந்தவாறு ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி,
இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான 33 பேர் கொண்ட ராணுவ வீரர் குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘ஜெய்பாரத்’ என்னும் ராட்சத பலூனில் பறந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த சாகச பயணம் கடந்த 6–ந் தேதி காஷ்மீரில் தொடங்கியது.
இந்தியா முழுவதும் 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 30–ந் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி, போபால், திருப்பதி, சென்னை காஞ்சிபுரம், செஞ்சி வழியாக பெரம்பலூர் வந்தனர். அங்கு கடந்த 21–ந் தேதி ராட்சத பலூனில் பறந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராணுவ வீரர்களின் விழிப்புணர்வு சாகச பயணத்தின் ஒரு திட்டமாக நேற்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு, 77 ஆயிரம் கனஅடி கொண்ட ஒரு ராட்சத பலூனில் 3 ராணுவ வீரர்களும், 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட ராட்சத பலூனில் 4 பேரும் ஏறி தரைத்தளத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்திற்கு அந்தரத்தில் பறக்க விடுவதற்காக ராட்சத பலூன்களை தயார்படுத்தி கொண்டிருந்தனர். தரைத்தளத்தில் காற்று குறைவாக இருந்தால்தான் ராட்சத பலூனை தரைத்தளத்தில் இருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்க விட முடியும். சரியாக காலை 7.40 மணிக்கு, 2 ராட்சத பலூன்களை ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்களை நிரப்பி தரைத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மேலே எழுப்பி அண்ணா விளையாட்டரங்கில் பறக்கவிட்டனர். இதனை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.
ராணுவ வீரர்கள் ராட்சத பலூன்களில், பொதுமக்கள் சிலரையும் ஏற்றியவாறு பறந்தபடி நின்றனர். ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது, அதனை கண்டுகளித்தவர்கள் தங்களது செல்போன் மூலம் ‘செல்பி’ எடுத்து கொண்டதை காண முடிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காலை 8.40 மணிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. ராணுவ வீரர்கள் பின்னர் பலூன்களை மடித்து எடுத்து வைக்க தொடங்கினர். இந்த ராட்சத பலூன் விழிப்புணர்வு பயணத்தில் 33 ராணுவ வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். திருச்சி லால்குடியை சேர்ந்த ஜெயக்குமார், தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த கோபிநாத், வேலூரை சேர்ந்த பழனி ஆகியோர் ஆவர். மேலும் ஒரு பெண் ராணுவ வீராங்கனையான வட மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.
விழிப்புணர்வு குறித்து இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத், லால்குடியை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயக்குமார் ஆகியோர் கூறுகையில்,‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ஒன்றுபட்ட இந்தியா என்பதை உணர்த்தும் வகையிலும், இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகமாக சேர்ப்பது போருக்காகவும், எல்லைக் காவலுக்காகவும் மட்டுமல்ல. சாதனையாளர்களை அடையாளம் காட்டவும் தான் என்பதை உணர்த்தவே ‘ஜெய்பாரத்’ என்ற இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் ஆகாயத்தில் 6 ஆயிரம் அடி உயரம் பறந்து செல்லும் விழிப்புணர்வு பயணம் முதன்முறையாக மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது’’ என்றனர்.
இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 2 ராட்சத பலூன் மூலம் குறிப்பிட்ட ராணுவ வீரர்கள் மட்டும் பறந்தபடி மதுரை புறப்பட்டு செல்கிறார்கள். சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பின்னர் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இறங்குகிறார்கள். அங்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.