கஞ்சா கடத்தலை தடுக்க தமிழக-கேரள போலீசார் இணைந்து வாகன சோதனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தமிழக-கேரள போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூடலூர்,
தமிழக-கேரள மாநிலங்களின் எல்லை நகரமாக தேனி மாவட்டம், கூடலூர் அமைந்துள்ளது. இந்த நகரசபையின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் போலீஸ் சோதனைச்சாவடி, வனத்துறை சோதனைச் சாவடிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் இந்தப் பாதை வழியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இந்த பாதை வழியாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து கடத்தல் சம்பவங்களை தடுக்க தமிழக-கேரள மாநில போலீசார் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குமுளியில் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, கேரள மாநிலம் குமுளி கலால்துறை அதிகாரி பிரதீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை இருமாநில போலீசார் இணைந்து கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கடத்துவதை கண்டறிய வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். வனப்பகுதி வழியாக நடமாடுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழக-கேரள போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்துவது என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தற்போது கம்பம் நகர பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகளவு கஞ்சா கடத்தப்பட்டு வருவதும், அவர்களை கேரள மாநில கலால் துறையினர் பிடித்து கைது செய்து வருவதும் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.