காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்ற பரமேஸ்வரின் கருத்துக்கு எடியூரப்பா பதிலடி ‘பா.ஜனதாவில் சேர்ந்தால் முக்கிய பதவி வழங்குவோம்’
காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறிய பரமேஸ்வருக்கு எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பா.ஜனதாவில் சேர்ந்தால் பரமேஸ்வருக்கு முக்கிய பதவி வழங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறிய பரமேஸ்வருக்கு எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பா.ஜனதாவில் சேர்ந்தால் பரமேஸ்வருக்கு முக்கிய பதவி வழங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் நேற்று மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. மந்திரி பதவி கிடைக்காததால் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரசில் உட்கட்சி மோதல் உருவாகி இருப்பதாகவும், அதனை அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்பேன் என்றும் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இதுபற்றி நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், ‘மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் மீது எடியூரப்பாவுக்கு அதிக அக்கறை உள்ளது. எடியூரப்பா காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம்,’ என்றார்.
எடியூரப்பா பதிலடி
இதுகுறித்து எடியூரப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா மாநில தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறேன். என்னை காங்கிரசுக்கு வரும்படி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார். பரமேஸ்வர் மீது மரியாதையும், நம்பிக்கையும் வைத்துள்ளேன். அவர் என்னை காங்கிரசுக்கு வரும்படி அழைப்பது சரியானது அல்ல. மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரசில் பிரச்சினை எழுந்திருப்பது உண்மை. இதனை அவர் மறுக்க முடியாது.
காங்கிரசில் பரமேஸ்வர் நினைத்த எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை. அதனால் பரமேஸ்வர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால் வரவேற்போம். அவர் நினைத்த முக்கிய பதவி வழங்குவோம். பா.ஜனதாவில் பரமேஸ்வரை கவுரவமாக நடத்துவோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.