திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

ஆனைமலை அருகே திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-12-22 21:03 GMT
ஆனைமலை,

ஆனைமலையை அடுத்த சுப்பேகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30) மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கிணத்துக்கடவு குமாரபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும் 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினர். ஆனால் இந்த சந்தோஷம் 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. திடீரென கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்ட னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு

விசாரணைக்கு பின்னர் போலீசார் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் 500 ரூபாயை வீட்டில் வைத்துவிட்டு, அதனை செலவு செய்து கொள்ளுமாறு மனைவியிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றார். இந்த பணத்தை எடுத்து கலைச்செல்வி கோவிலுக்கு சென்றுவந்துள்ளார். மறுநாள் மணிகண்டன், மனைவியிடம் எவ்வளவு செலவானது என்று கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, கலைச்செல்வி அழுதபடி வீட்டில் உள்ள அறைக்குள் சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ள மற்றொரு அறையில், மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்