நாகையில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியல் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகையில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-22 21:45 GMT
நாகப்பட்டினம்,

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணம் பொருட்கள், உதவித்தொகை ஆகியவற்றை அறிவித்தது. இந்த நிவாரண பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நிவாரண பொருட்கள் பல கிராமங்களுக்கு முறையாக செல்லவில்லை என்று கூறி கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி புத்தூர் ரவுண்டானா முன்பு நேற்று 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். இதில் மதிவாணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணியை சேர்ந்த செந்தில், நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், நில அபகரிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நாகை-திருவாரூர்- காரைக்கால்- வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்