ஆலங்குளத்தில் இரவு நேர கடைகளுக்கு அனுமதி போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்

ஆலங்குளத்தில் இரவு நேர கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரிகள் வலியுறுத்தினர்.;

Update: 2018-12-22 22:00 GMT
நெல்லை, 

ஆலங்குளத்தில் இரவு நேர கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரிகள் வலியுறுத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் வைகுண்டராஜன் தலைமையில் இணை செயலாளர் நயன்சிங், மண்டல தலைவர் சுப்பிரமணியன், ஓட்டல் அதிபர் சங்க தலைவர் உதயராஜ், செயலாளர் தவசி சுப்பிரமணியன், கலைவாணன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தாலுகா அலுவலகம், நகரப்பஞ்சாயத்து, சட்டமன்ற தொகுதி தலைமையிட அலுவலகம், கோர்ட்டு, கருவூலம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களுக்கு தலைமையிடமாக அமைந்துள்ளது. மேலும் 6-க்கும் மேற்பட்ட வங்கிகள், அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், காய்கறி மார்க்கெட்டுகள், அரிசி ஆலைகள், ஜவுளி கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்கள் உள்ளன.

மேலும் ஆலங்குளம் தூத்துக்குடி -கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வாகனங்களில் ஏராளமானோர் சரக்குகளை கொண்டு சென்று வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகளும் ஆலங்குளம் வழியாக வந்து செல்கின்றனர்.

இரவு நேர கடை

இதுதவிர சிறு, குறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், வெளியூர் பயணிகள் இரவு நேரத்தில் ஆலங்குளம் பஸ்நிலைய பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதிப்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் ஆலங்குளம் வழியாக செல்லும் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே ஆலங்குளத்தில் இரவு நேர ஓட்டல்கள், கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்