குற்ற செயல்களில் ஈடுபட்ட அண்ணன்-தம்பிக்கு 264 நாள் சிறை

குற்ற செயல்களில் ஈடுபட்ட அண்ணன்-தம்பிக்கு 264 நாள் சிறை தண்டனை விதித்து துணை கமிஷனர் உத்தரவிட்டார்.;

Update: 2018-12-22 21:45 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. பிரபல ரவுடி. இவருடைய மகன்கள் மணிவண்ணன் (வயது 28), ரஞ்சித் (27). இவர்கள் இருவர் மீதும் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் இருவரும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாளி பிரியாவிடம், “இனிமேல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்” என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் தொழிற்சாலை ஒன்றில் மிரட்டி ரவுடி மாமூல் வசூலித்தபோது திருவொற்றியூர் போலீசார் அண்ணன்-தம்பி இருவரையும் கைது செய்தனர். பின்னர் துணை கமிஷனர் முன் அவர்களை ஆஜர்படுத்தினர். பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை மீறி, குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் இருவருக்கும் தலா 264 நாட்கள் சிறை தண்டனை விதித்து துணை கமிஷனர் ரவாளி பிரியா உத்தரவிட்டார். அண்ணன், தம்பிகளான மணிவண்ணன், ரஞ்சித் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோன்று எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டியன் (33) என்ற ரவுடியும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை மீறியதால் 317 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்