குமாரபாளையம் அருகே உடுக்கை அடித்து விவசாயிகள் போராட்டம்
குமாரபாளையம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுக்கை அடித்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம்,
குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 6-வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதல், மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரத பேராட்டம் நடத்த உள்ளோம் என குறிப்பிட்டார்.
இதையொட்டி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பதிலாக சாலையோரத்தில் புதைவட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரியும் உடுக்கை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., துணைச்செயலாளர் எஸ்.சேகர், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், பள்ளிபாளையம் யுவராஜ், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் வெங்கடாசலம், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் சென்னிமலை பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.