குமாரபாளையம் அருகே துணை மின் நிலையம் சோதனை ஓட்டம் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா தொடங்கி வைத்தனர்

குமாரபாளையம் அருகே துணை மின் நிலைய சோதனை ஓட்டத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2018-12-22 22:00 GMT
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பக்கமுள்ள உப்புப்பாளையத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் சார்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ரூ.8.96 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தினை தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:- இப்பகுதியில் அதிக தொழிற்சாலைகள் உள்ளதால் அதிக மின்னழுத்தம் ஏற்படுவதாகவும், மின்னழுத்தத்தினை குறைப்பதற்காக துணைமின் நிலையம் அமைத்து தருமாறும் பல்வேறு தொழிற்சாலை நடத்துவோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

பொதுமக்களும் போதிய அளவில் ஒத்துழைப்பு வழங்கி, துணைமின் நிலையம் அமைத்திட இடங்களை வழங்கியதன் காரணமாக 13.1.2018 அன்று துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. இன்று முதல் 10 நாட்கள் துணைமின் நிலையம் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. சோதனை ஓட்டம் முடிவுற்ற பிறகு இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

இந்த 2 ஆண்டுகளில் 105 துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 60 துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 6 மாத காலத்திற்குள் முடிவுறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மின்னழுத்தம் அதிகமாக உள்ள பகுதிகளில் சீராக மின்சாரம் கிடைக்கும் நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி மத்திய அரசால் மட்டும் 765 கி.வோ. திறன்கொண்ட துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கும் அத்தகைய துணைமின் நிலையம் அமைத்திட வேண்டும் என்பதற்காக 765 கி.வோ. திறன்கொண்ட 4 துணைமின் நிலையங்கள் அமைத்திட ஆணையிட்டார். அதன்காரணமாக ஈரோடு மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டத்திலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் தற்போது வருடத்திற்கு கூடுதலாக 1,000 மெகாவாட் என மின்தேவை அதிகரித்து கொண்டுள்ளது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர மின்பாதைகள் அமைக்கப்படவேண்டும்.

சத்தீஷ்கார் மாநிலத்திலிருந்து 6,000 கிலோவாட் அளவில் மின்சாரம் தமிழகத்திற்கு கொண்டுவருவதற்காக மின்பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் பொதுமக்களை தூண்டி வருகிறார்கள். தற்போது 800 கிலோவாட் அளவிற்கு மின்சாரம் உயர் கோபுர மின்பாதை வழியாக கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்மின்னழுத்த மின்சாரத்தை மின்புதைவட பாதை வழியாக கொண்டுவரவேண்டுமென கூறுகிறார்கள். வளர்ச்சியடைந்த அமெரிக்காவில் கூட இதுபோன்ற ஒரு சூழல் இல்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் நிலத்தடியில் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது என்பது போன்ற தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். புதிய மின்பாதைகள் அமைத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் உற்பத்தி சந்திரசேகர், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், ஈரோடு மண்டல பகிர்மான கழக தலைமை பொறியாளர் சாந்தி, சங்ககிரி இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்