தட்டார்மடம் அருகே அண்ணனுடன் விஷம் குடித்த தம்பியும் பரிதாப சாவு போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

தட்டார்மடம் அருகே அண்ணனுடன் விஷம் குடித்த தம்பியும் பரிதாபமாக இறந்தார். அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-12-22 22:15 GMT
தட்டார்மடம், 

தட்டார்மடம் அருகே அண்ணனுடன் விஷம் குடித்த தம்பியும் பரிதாபமாக இறந்தார். அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணன்-தம்பி சாவு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள மணிநகர் புதூரைச் சேர்ந்தவர் கோயில்மணி. இவருடைய மகன்கள் ராஜா (வயது 28), விஜய் (26). இவர்கள் 2 பேரும் கடந்த 20-ந் தேதி இரவில் தங்களது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த விஜயை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் விஜயும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

மனைவி பிரிந்து சென்றார்

ராஜா, லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சிலுவைக்கனி (27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜா தனது லோடு ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக, மனைவியிடம் நகைகளை கேட்டார். ஆனால் அவர் நகைகளை தர மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலுவைக்கனி தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, முதலூரில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். இதனால் ராஜா, சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார்.

காதல் தோல்வி

இதற்கிடையே ராஜாவின் தம்பியான விஜய், கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது சொந்த ஊரின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு விஜய் 3 பவுன் தங்க சங்கிலி, செல்போன் வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வந்ததால், அந்த பெண் தன்னை மறந்து விடும்படி விஜயிடம் கூறினார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜய், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த 20-ந் தேதி காலையில் கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் தனது துணிப்பையில் மதுபாட்டிலில் விஷம் கலந்து எடுத்து வந்தார்.

விஷம் கலந்த மது

இதற்கிடையே ராஜா வழக்கம்போல் மாலையில் மது குடித்து விட்டு, தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தன்னுடைய தம்பி விஜயின் துணிப்பையில் மதுபாட்டில் இருந்ததை பார்த்த ராஜா, அதில் விஷம் கலந்து இருப்பதை அறியாமல் அதனை எடுத்து பாதி குடித்தார். அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

பின்னர் விஜய் வீட்டுக்கு சென்றபோது, அங்கு தன்னுடைய அண்ணன் ராஜா, விஷம் கலந்த மதுவை குடித்து மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனினும் விஜய் தன்னுடைய அண்ணனை காப்பாற்றாமல், அவரும் விஷம் கலந்த மதுவை குடித்து மயங்கி விழுந்தார். இதனால் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அண்ணன்-தம்பி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்