நாமக்கல் அருகே ஜவ்வரிசி குடோனுக்கு ‘சீல்’ கலப்பட புகார் எதிரொலி

நாமக்கல் அருகே உற்பத்தி நிறுத்தப்பட்ட ஜவ்வரிசி ஆலையில், தற்போது கலப்படம் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்புவதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஜவ்வரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர்.

Update: 2018-12-22 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டியில் செல்வம் என்பவர் ஜவ்வரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவரது ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஜவ்வரிசி தயாரிக்க மக்காச்சோள மாவு கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ஆலையின் மீது மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வம் தனது ஆலையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை நிறுத்தி கொண்டார்.

இதற்கிடையே செல்வம், ஜவ்வரிசி மூட்டைகளை சேலம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து, அதில் கலப்படம் செய்து போலி லேபிள்களை பயன்படுத்தி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் அலுவலர்கள் செல்வத்தின் ஜவ்வரிசி ஆலையில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தரமான ஜவ்வரிசி மூட்டைகள் மற்றும் தரம் குறைந்த ஜவ்வரிசி மூட்டைகளை செல்வம் வாங்கி, இரண்டையும் கலந்து 45 கிலோ கொண்ட புதிய மூட்டைகளை தயார் செய்து, வட மாநிலங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு அறை முழுவதும் ஜவ்வரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து, அதன் மீது ஜவ்வரிசியை கொட்டி வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தரம் குறைவான ஜவ்வரிசிகளில் உணவு மாதிரி எடுக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு செல்வம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஜவ்வரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

உணவு மாதிரி எடுத்த பிறகு அதில் கலப்படம் இருந்தால் செல்வம் மீது வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்