‘தூய்மை இந்தியா’ திட்ட தூதுவராக நியமிக்கப்பட்ட ஆம்பூர் மாணவியின் குடும்பத்துக்கு வீடு கட்ட அரசாணை அமைச்சர்கள் வழங்கினர்
‘தூய்மை இந்தியா’ திட்ட ஆம்பூர் நகராட்சி தூதுவராக நியமிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டுவதற்கான அரசாணையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் வழங்கினர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் ஹனீபாஜாரா (வயது 7), ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்களது வீட்டில் கழிவறை இல்லை. குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை கட்ட வசதியும் இல்லை. திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டதால் மனமுடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டித்தரும்படி கூறினார். ஆனால் அவர் கட்டித்தருவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.
ஏமாற்றம் அடைந்த மாணவி கடந்த 10–ந் தேதி ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் மனு அளித்தார். அதில், திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், கழிவறை கட்டித்தருவதாக ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் வளர்மதி, அதுகுறித்து மாணவியின் பெற்றோர், ஆம்பூர் நகராட்சி ஆய்வாளரை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து மாணவி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தார்.
மாணவி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ராமன் உடனடியாக ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு மாணவியின் வீட்டிற்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார். மேலும் வீட்டில் கழிவறை கட்ட மேற்கொண்ட தொடர் முயற்சிக்காக மாணவி ஹனீபாஜாராவுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து மாணவியின் வீட்டில் உடனடியாக கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஹனிபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
இதனிடையே மாணவி ஹனீபாஜாரா தந்தை இஷானுல்லா அரசு தனக்கு ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் ராமன், அவருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதற்கான ஆணையை மாணவியிடம் வேலூரில் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்த தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர்.