கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி,
சென்னை எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து 18 டன் எடைகொண்ட கியாஸ் ஏற்றப்பட்ட ராட்சத டேங்கர் லாரி ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3½ மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மேற்கண்ட லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் சாலையோரம் இருந்த சிமெண்டு தடுப்பு மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்தது.
லாரியை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அங்கமுத்து (வயது 35) படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வாகனங்கள் விரைந்து வந்து தீயணைப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் அந்த லாரி மீது பாதுகாப்பாக தண்ணீரை பீய்ச்சி அடித்து அதனை குளிர்வித்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ், போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் சென்னையில் இருந்து வந்த எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகள் மேற்கண்ட லாரியில் சிறிய அளவில் எரிவாயு கசிவு இருப்பதை முதல் கட்டமாக உறுதி செய்தனர். நேரம் ஆக, ஆக அந்த எரிவாயு கசிவு அதிக அளவில் வருவது கண்டறியப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், சிலிண்டர்களில் சமையல் எரிவாயுவை நிரப்பும் 2 எரிவாயு கிடங்குகளும், 10-க்கும் மேற்பட்ட இரும்பு உருக்கு தொழிற்சாலைகளும், பல்வேறு ரசாயன தொழிற்சாலைகளும் இயங்கி வருவதால் விபத்தின் வீரியத்தை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், கவரைப்பேட்டை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
மின்சாரம் துண்டிப்பு
கவிழ்ந்த கியாஸ் லாரியின் அருகே யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லவும் போலீசார் தடை விதித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்தவுடன் முதலில் கும்மிடிப்பூண்டி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் நிலைமைக்கு ஏற்ப சம்பவம் நடந்த இடத்தையொட்டி உள்ள சிப்காட் பகுதியிலும், அதனையொட்டிய கிராமங்களிலும் மீட்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இதுதவிர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற அனைத்து வாகனங்களும் கும்மிடிப்பூண்டி பஜாருக்குள் திருப்பி அனுப்பப்பட்டது.
லேசான மழை
மீட்பு பணியின்போது சம்பவ இடத்திற்கு சென்னையில் இருந்து 3 காலி சிலிண்டர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது.
விபத்துக்கு உள்ளான லாரியில் இருந்த 18 டன் சமையல் எரிவாயு பாதுகாப்பாக மேற்கண்ட 3 லாரிகளில் பிரித்து அதற்குரிய குழாய் மூலம் மாற்றப்பட்டது. அதன் பின்னர் சாலையோரம் கவிழ்ந்த லாரி அங்கிருந்து அகற்றப்பட்டது.
விபத்து நடந்தபோது கவிழ்ந்த லாரியையொட்டி ஒரு மின்கம்பம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக எந்த வித அசாம்பாவித சம்பவங்களும் அங்கு ஏற்படவில்லை. மேலும் பாதுகாப்பாக மீட்பு பணிகள் முடிவடைந்ததால் அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.