வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் வரை 14 கிலோ மீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கீரப்பாக்கம், அருங்கால், காட்டூர், குமிழி, மேட்டுப்பாளையம், காரணைப்புதுச்சேரி, முருகமங்கலம், உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் தினமும் செல்கின்றனர்.
இந்த சாலை செல்லும் வழியில் காட்டூரில் இருந்து அருங்கால் வரை வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிற காரணத்தால் இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே போல நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி வரை செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த சாலையும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கூட போக முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் வரும் சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், நேற்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.