மண்டியா மாவட்டத்தில் கோழி பாக்யா திட்டம் தொடக்கம் 1,974 பேர் பயன் அடைகிறார்கள்

மண்டியா மாவட்டத்தில் கோழி பாக்யா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 1,974 பேர் பயன் அடைகிறார்கள்.

Update: 2018-12-21 23:00 GMT
மண்டியா, 

மண்டியா மாவட்டத்தில் கோழி பாக்யா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 1,974 பேர் பயன் அடைகிறார்கள்.

கோழி பாக்யா திட்டம்

கர்நாடகத்தில் ஏற்கனவே ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக அரசு பசு பாக்யா, ஆடு பாக்யா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கி, ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல் பிற வகுப்பினருக்கு மானிய விலையிலும் ஆடு, மாடுகளை அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தில் கோழி பாக்யா என்னும் திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் தொடக்க விழா நேற்று முன்தினம் சண்டகலு கிராமத்தில் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சிவண்ணா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தலா 10 கோழிகளை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

1,974 பேர் பயன் அடைகிறார்கள்

இதுகுறித்து சிவண்ணா கூறியதாவது:-

கர்நாடக அரசு இந்த கோழி பாக்யா திட்டத்தை மண்டியா மாவட்டத்தில் முதற்கட்டமாக அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 10 கோழிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள். மீதி 6 பேர் பிற வகுப்பினர் ஆவர்.

மாவட்டத்தில் மொத்தம் 233 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மண்டியா மாவட்டத்தில் 1,974 பயனாளிகள் இந்த திட்டத்தில் பயன் அடைகிறார்கள். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இலவசமாகவும், பிற பிரிவினருக்கு ரூ.222 மானியத்தில் 10 கோழிகளும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்