புயல் நிவாரண பொருட்கள் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

புயல் நிவாரண பொருட்கள் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-21 23:00 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் ஒன்றியம் மேலமுத்துக்காடு கிராம மக்களுக்கு நேற்று தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி ஈடுபட்டார். இந்நிலையில் அவர் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் டோக்கன் வழங்குவதாகவும், அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என்றும் கூறி, நிவாரண பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த கட்டிடத்திற்கு கிராம மக்கள் பூட்டு போட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி அருகே உள்ள பி மாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை அனைவருக்கும் வழங்க கோரி புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பட்டுவிடுதி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சின்னையாசத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சம்பட்டிவிடுதி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். தற்போது கஜா புயலால் பாதிப்பு அடையாத பெரும்பாலான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வருவாய்த்துறை முறையாக கணக்கெடுத்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்றுகூறி அரிமளம்-ராயவரம் சாலையில் செங்கீரை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மரக்கட்டையை போட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பாதிக்கபட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுங்கள். மாவட்ட கலெக்டரிடம் பேசி அனைவருக்கும் நிவாரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அரிமளம்-ராயவரம் சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், துணை தாசில்தார் ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதின் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

காடவராயன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையிலும், தச்சன்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியலுக்கு காரணமாக இருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார், போலீஸ் வேனில் ஏற்றி கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்பினர்.

கறம்பக்குடி அருகே உள்ள குளப்பன்பட்டி, ஆத்தங்கரைவிடுதி, பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயத்திற்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் கருக தொடங்கின. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று குளப்பன்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மின்கம்பங்களை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து அவர்கள் பகுதியில் மின்கம்பங்களை இறக்கி செல்லும்படி வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மழையூர் ஊராட்சி பகுதியில் அரசின் நிவாரண பொருட்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டதை கண்டித்தும், அனைவருக்கும் வழங்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்