கோடம்பாக்கத்தில் ஒரு வயது குழந்தையை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை
கோடம்பாக்கத்தில் ஒரு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பூந்தமல்லி,
சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியில் வசித்து வருபவர் தினேஷ்குமார் (வயது 36). அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், சேத்துபட்டில் உள்ள இந்திய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி ரக்சிதா (33). இவர்களுக்கு 1 வயதில் ருத்ரு என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற தினேஷ்குமார், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால் கதவை தட்டினார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது ரக்சிதா படுக்கையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.
குழந்தை கொலை
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் குழந்தை ருத்ருவும், பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
மனைவி, குழந்தை இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு தினேஷ்குமார் கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. ரக்சிதா, தனது குழந்தையை கொன்றுவிட்டு, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
காரணம் என்ன?
இதில் ரக்சிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக மன அழுத்தம் காரணமாக அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படு கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதனால் ரக்சிதா மீண்டும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று தனது குழந்தைக்கு கழிவறைக்கு பயன்படுத்தப்படும் திரவத்தை உணவில் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ரக்சிதாவுக்கும், அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதா? இதனால் அவர் விரக்தியில் குழந்தையை கொன்று விட்டு, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரக்சிதாவின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.