நெல்லை அருகே பரபரப்பு: கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது

நெல்லை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-21 22:15 GMT
நெல்லை, 

நெல்லை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்

நெல்லை அருகே உள்ள பழைய பேட்டையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், மாரியப்பன் மற்றும் போலீசார் பேட்டையை சுற்றியுள்ள பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், பேட்டை அருகே மயிலப்பபுரத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 5½ டன் ரேஷன் அரிசி இருந்தது. அந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, தாழையூத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது-கார் பறிமுதல்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற மயிலப்பபுரத்தை சேர்ந்த கொம்பையா (வயது 47), வினோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

ஏற்கனவே இவர்கள் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்