தனியார் பஸ் அலுவலகத்தில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார் போலீசார் விடிய, விடிய விசாரணை
சேலத்தில் தனியார் பஸ் நிறுவன அலுவலகத்தில் திருட முயன்ற வாலிபரிடம் போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
சேலம்,
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் திடீரென்று புகுந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பொருட்களை திருட முயன்றார். இதை பார்த்த காவலாளிகள் அலுவலக வெளிப்புற கதவை பூட்டினர். பின்னர் தங்கள் அலுவலகத்தில் திருடன் புகுந்து விட்டான் என்று அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது கொள்ளையன் அங்கு உள்ள ஒரு கழிப்பிட அறையில் புகுந்து கொண்டார்.
போலீசார் அவரிடம் வெளியில் வரும் படி கூறினர். ஆனால் வெளியில் வர மறுத்து விட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த அவர், போலீசார் முன்பு திடீரென்று படுத்துக்கொண்டார். அவரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். ஊமை போன்று எந்த வித பதிலும் கூறவில்லை. மேலும் வலிப்பு வந்தவர் போல் நடித்து உள்ளான். அவரை நள்ளிரவில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக் டர்கள், அவருக்கு எந்த வித நோயும் இல்லை என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் எந்த வித பதிலும் கூற வில்லை. இதனால் ஊமையாக இருக்கும் என்று நினைத்த போலீசார் எவ்வாறு விசாரணை நடத்துவது என்று திணறினர். பின்னர் நேற்று காலை போலீசார் மீண்டும் விசாரணை நடத்திய போது அவர் சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சண்முகாநகர் சாமுண்டி தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது30) என்று தெரிந்தது. மேலும் இவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் ஈடுபட்டவர் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மேலும் எந்தெந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.