எண்ணூரில் 57 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
57 கிராம ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் எர்ணாவூர் ரவுண்டானா அருகில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை.
அதேபோன்று 2012-ம் ஆண்டு எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் திருவொற்றியூர் மேற்கு பகுதி, எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 57 கிராம ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் எர்ணாவூர் ரவுண்டானா அருகில் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் தியாகராஜன், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தொடங்கி வைத்தார். இதில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, முன்னாள் நகராட்சி தலைவர்கள் ஜெயராமன், திருசங்கு, கிராம ஒருங்கிணைப்பு சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வின்சென்ட் ராஜரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.