ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி 3-ந் தேதி விவசாயிகள் பேரணி பி.ஆர்.பாண்டியன் பேட்டி
ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுமான பணியை கைவிட வலியுறுத்தியும், ஒகேனக்கல் அருகே ராசி மணலில் தமிழகம் அணை கட்ட ஒத்துழைத்திட வலியுறுத்தியும் மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து இந்த பேரணி புறப்படுகிறது. இது தொடர்பாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி அணையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் காவிரியில் மேகதாது என்னும் இடத்தில் அணையை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை வழங்க போவதாக கர்நாடக மாநில முதல்-மந்திரியும், கர்நாடக மாநில நீர் பாசனத்துறை மந்திரியும் கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக மேகதாதுவில் அணையை கட்ட விரைவு திட்ட ஆய்வு அறிக்கையை தயார் செய்ய பிரதமர் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் ஆகும். அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் பேச மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயல்கள் அரசியல் லாபத்திற்காகவும், தமிழகத்தை அழிப்பதற்காகவும் இப்படி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தமிழகம் ஏற்காது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை கைவிட வேண்டும். ராசி மணலில் தமிழகம் அணை கட்டி தண்ணீரையும், மின்சாரத்தை கர்நாடகாவும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கர்நாடகா முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று முற்றுகையிட இருக்கிறோம்.
ராசி மணலில் அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். விளை நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் உறுதிப்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை பொய்த்ததால் 2 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்திற்கு வர கூடிய தண்ணீரை தடுக்க கர்நாடகாவிற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் வெங்கடேசன், சின்னசாமி, நாகராஜன், மாதேஸ்வரன், மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.