மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் தகவல்
சென்னை மெரினா கடற்கரையில் பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை,
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை மற்றும் சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-
மெரினா கடற்கரையில் ரூ.6.78 கோடி மதிப்பில் 8 நவீன டிராக்டர் எந்திரம்கொண்டு தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நவீன டிராக்டர் எந்திரம் கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை பொருட்களை தனித்தனியே பிரித்தெடுக்கும் வசதி உடையதாகும். மேலும் இந்த டிராக்டர் எந்திரம் மூலம் 8 ஏக்கர் இடத்தை 1 மணி நேரத்தில் சுத்தம் செய்ய முடியும்.
150 குப்பை தொட்டிகள்
மெரினா கடற்கரையில் புதிய 150 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் உள்ள வியாபார கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் அங்குள்ள சிறு கடைகள் ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த 45 பேரை மீட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமரா
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-
சென்னை போலீஸ் சார்பில் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும் கடற்கரையில் ரோந்து பணியில் உள்ள போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை கமிஷனர் கோவிந்தராவ், மதுசுதன் ரெட்டி, சுபோத்குமார், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.