பல்லாரி, பாகல்கோட்டையில் அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பல்லாரி மற்றும் பாகல்கோட்டையில் அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவ-மாணவி களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பல்லாரி மற்றும் பாகல்கோட்டையில் அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவ-மாணவி களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2018-12-20 22:30 GMT
பல்லாரி, 

பல்லாரி மற்றும் பாகல்கோட்டையில் அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவ-மாணவி களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பல்லாரி மாவட்டம் சிருகுப்பா அருகே கொராரு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட பின்பு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சில மாணவிகள் வயிற்று வலியால் துடித்தார்கள்.

இதுபற்றி அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்தனர். அந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகளை 2 டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு, பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு மாணவ, மாணவி களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரியவந்தது. மதிய உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என்றும், அந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து சிருகுப்பா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாம்பாரில் பல்லி விழுந்ததால்...

இதுபோல, பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து அருகே சிக்கேமாகி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதியம் அரிசி சாதமும், சாம்பாரும் வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 40 பேரும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மாணவ, மாணவிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உனகுந்து போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கும், பள்ளிக்கும் சென்று விசாரித்தனர். அப்போது மாணவ-மாணவிகள் சாப்பிட்ட சாம்பாரில் ஒரு பல்லி செத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்டதால் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உனகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பரபரப்பு

ேநற்று ஒரேநாளில் பல்லாரி, பாகல்கோட்டை மாவட்டங்களில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்