கோவில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலி: கைதான இளைய மடாதிபதி உள்பட 4 பேர் மீதும் கொலை வழக்கு பாய்ந்தது

கோவில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான வழக்கில் கைதாகி உள்ள இளைய மடாதிபதி உள்பட 4 பேர் மீதும் கொலை வழக்கு உள்பட 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2018-12-21 04:30 IST
கொள்ளேகால், 

கோவில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான வழக்கில் கைதாகி உள்ள இளைய மடாதிபதி உள்பட 4 பேர் மீதும் கொலை வழக்கு உள்பட 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

15 பேர் பலி

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள். 90-க்கு மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மைசூருவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதொடர்பாக ராமாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனா தலைமையிலான தனிப்படையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரசாதத்தில் விவசாய நிலங்களுக்கு தெளிக்கப்படும் சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாரம்மா கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டு சாளூர் இளைய மடாதிபதி மகாதேவசாமி, அவருடைய கள்ளக்காதலியும், கோவில் மேற்பார்வையாளருமான அம்பிகா, அவரது கணவரும், கோவில் மேலாளருமான மாதேஷ், இவரது நண்பர் தொட்டய்யா ஆகியோர் சேர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் 4 பேரையும், 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து ராமாபுரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

15 மருந்து பாட்டில்களை...

அதாவது முதலில் அம்பிகாவும், அவருடைய கணவர் மாதேஷ், கூட்டாளி தொட்டய்யா ஆகியோர் சேர்ந்து பிரசாதத்தில் 4 மருந்து பாட்டில்களை ஒரு வாளியில் ஊற்றி, அதில் தண்ணீர் கலந்து பிரசாதத்தில் கலந்ததாக தெரிவித்தனர். தற்போது அவர்கள் 15 மருந்து பாட்டில்களை தண்ணீருடன் சேர்ந்து, பிரசாதத்துடன் கலந்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அவர்கள் விஷம் கலந்துவிட்ட சிறிது நேரத்தில் சமையல்காரர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவர் அங்கு ஏதோ ஒரு நெடி வருவதை உணர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த அம்பிகா, அந்த சமையல்காரரின் கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை வழக்கு

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக முதலில் போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-ன்(மரணம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இவ்வழக்கில் கைதாகி உள்ள இளைய மடாதிபதி மகாதேவசாமி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அவருடைய கணவர் மாதேஷ், கூட்டாளி தொட்டய்யா ஆகிய 4 பேர் மீதும் 302(கொலை), 307(கொலை முயற்சி), 120-பி(சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்