விவசாய கடன் தள்ளுபடியால், வளர்ச்சி பணிகளுக்கு பாதிப்பு இல்லை மேல்-சபையில் குமாரசாமி பேச்சு
விவசாய கடன் தள்ளு படியால் வளர்ச்சி பணி களுக்கு பாதிப்பு இல்லை என்று மேல்-சபையில் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
விவசாய கடன் தள்ளு படியால் வளர்ச்சி பணிகளுக்கு பாதிப்பு இல்லை என்று மேல்-சபையில் குமாரசாமி கூறினார்.
நிதி ஒதுக்கீடு
கர்நாடக மேல்-சபையில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் வட கர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது. அப்போது முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இதனால் மற்ற திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வட கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, கடன் தள்ளுபடி திட்டத்திற்கு பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறானது.
எல்லை பிரச்சினை
விவசாய கடனை தள்ளுபடி செய்வதால், வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எல்லை பிரச்சினையில் மராட்டிய மாநிலம் அடிக்கடி பிரச்சினை செய்கிறது. அந்த மாநிலத்திற்கு உறுதியான செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் ஆண்டுக்கு ஒரு முறை பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி இருந்தபோது, முதல் முறையாக பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்தினோம். அப்போது உள்துறை மந்திரியாக இருந்தவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்.
பெலகாவியை...
அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு, பெலகாவியை மராட்டிய மாநிலத்துடன் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் முறையிட்டது. அதனால் அந்த ஆண்டு ஒரு முறை மட்டும் பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்தோம்.
சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவதுடன், நிரந்தரமாக சுவர்ண சவுதா கட்டிடத்தையும் கட்டினோம். இங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியின் பிரச்சினைகளை மட்டும் விவாதிப்பது நோக்கம் அல்ல. ஒட்டுமொத்த கர்நாடகத்தின் பிரச்சினைகளை விவாதித்து அதற்கு தீர்வு காண்பது தான் நோக்கம் ஆகும்.
கேள்வி நேரம் முடியட்டும்
வடகர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதித்தால் அதற்கு பதிலளிக்க அரசு தயாராக உள்ளது. வடகர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் எங்களுக்கும் ஆர்வம் உள்ளது. முதலில் கேள்வி நேரம் முடியட்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசபூஜாரி, “வட கர்நாடகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க அரசின் கவனத்தை ஈர்ப்பது எங்களின் கடமை” என்றார்.
குடிநீர் பிரச்சினை
மீண்டும் பேசிய குமாரசாமி, “எந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு இங்கேயே தீர்வு காண்கிறோம். கூட்டத்தொடர் நடைபெறும்போது, சில அமைப்புகள் போராட்டம் நடத்துவது இயல்பானது. கடந்த முறையை ஒப்பிட்டு பார்த்தால், இந்த முறை போராட்டங்களின் எண்ணிக்கை குறைவானது தான்” என்றார்.