வட கர்நாடகத்தை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை முதல்-மந்திரி குமாரசாமி உறுதி

வட கர்நாடகத்தை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-12-20 22:30 GMT
பெங்களூரு,

வட கர்நாடகத்தை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

நேரடியாக கொள்முதல்

கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ‘காயக’ (உழைப்பு) திட்ட தொடக்க விழா நேற்று பெலகாவியில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த ‘காயக’ திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும். அந்த மகளிர் சுயஉதவி சங்கங்கள் தயாரிக்கும் ெபாருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

வட்டியில்லா கடன்

ஏழை மக்கள் கடன் சுமையுடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஏழைகளின் தோழன்’ என்ற திட்டத்தை ஏற்கனவே தொடங்கினோம்.

இதன் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டும். அடுத்து வரும் நாட்களில் ஏழைகளை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி

ரூ.46 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யும் சவால் எங்கள் முன் உள்ளது. ஆனால் சிலர் மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை யாரும் நம்ப வேண்டாம். என்னை நம்புங்கள்.

வட கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி மூலம் ரூ.29 ஆயிரம் கோடி பயன் கிடைக்கிறது. வட கர்நாடகத்தை புறக்கணிப்பதாக சொல்கிறார்கள். வட கர்நாடகத்தை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

ஆதங்கப்பட தேவை இல்லை

நான் உங்களுக்கு சொந்தமானவன். விவசாயிகள் ஆதங்கப்பட தேவை இல்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவ அரசு எப்போதும் தயாராக உள்ளது. விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்க அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு சிறிது காலஅவகாசம் தேவை. நாட்டிலேயே கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

உழைக்கும் கரங்களுக்கு...

விழாவில் உழைக்கும் கரங்களுக்கு உதவ வேண்டும் என்பது இந்த காயக திட்டத்தின் நோக்கம் என்று கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார்.

மேலும் செய்திகள்