வால்பாறை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பொதுமக்கள் பீதி
வால்பாறை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வால்பாறை வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
காட்டுயானைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு செல்லும் காட்டுயானைகள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பகல் நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே முகாமிட்டுள்ளன. இதனால் தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காட்டெருமைகளும் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு அருகே சுற்றிதிரிவதுடன் தொழிலாளர்களை தாக்கியும் வருகின்றன.
இதே போல வனப்பகுதிகளை விட்டு நள்ளிரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகளும் வெளியே வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து ஆடு, மாடு, கன்று குட்டிகள், நாய்களை அடித்து கொன்று விடுகின்றன. இந்த நிலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையோரத்தில் பதுங்கி நின்றது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சிறுத்தைப்புலியை பார்த்து பீதி அடைந்தனர். சிலர் செல்போனில் படம் பிடித்தனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து அறிந்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதியில் உள்ள ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.