ரூ.1,277 கோடி பேரிடர் நிதியை பயன்படுத்தலாம் ‘கஜா’ புயல் நிவாரண நிதி 2 வாரத்தில் அறிவிக்கப்படும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

கஜா புயல் நிவாரண நிதி இன்னும் 2 வாரத்தில் அறிவிக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-12-20 23:30 GMT
மதுரை,

மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த மாதம் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை தாக்கிய கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திரு முருகன், தஞ்சை மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான வசதிகளை விரைவாக செய்து கொடுக்க உத்தரவிட்டது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் கஜா புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.3,537 கோடியை ஒதுக்கியதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கஜா புயல் நிவாரண பணிகளுக்கு, மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உரிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு வைத்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி வாதிடுகையில், ‘கஜா புயல் நிவாரணம் குறித்து மத்திய குழு கேட்ட தகவல்கள் அனைத்தையும் தமிழக அரசு அனுப்பியுள்ளது. அவை போதுமானவையாக உள்ளன. இதையடுத்து மத்திய குழு தனது ஆய்வு அறிக்கையை தனக்கு மேல் உள்ள கமிட்டியிடம் ஓரிரு நாட்களில் சமர்ப்பித்துவிடும். அதன்பேரில் புயல் நிவாரண நிதி வழங்குவது பற்றி 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும்.

மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத்தொகையில் ரூ.1,277.62 கோடி இருக்கிறது. தேவைப்படும்பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம்“ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “கஜா புயல் நிவாரண நிதியை விரைவாக மத்திய அரசு வழங்கும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கை ஜனவரி மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்