பிரியாணி கடை ஊழியருடன் கள்ளக்காதல்: குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
சென்னை,
சென்னை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலானது. இதை தெரிந்துகொண்ட விஜய், அபிராமியை கடுமையாக கண்டித்தார். இதையடுத்து தன் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்தார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபிராமியை கைது செய்தனர். இந்த வழக்கில் அபிராமி 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை காஞ்சீபுரம் மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து ஐகோர்ட்டில் அபிராமி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அபிராமி சார்பில் வக்கீல் சிவா வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விசாரணை தொடங்க உள்ளது‘ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் அபிராமி கீழ் கோர்ட்டில் விசாரணையை எதிர்கொள்ளட்டும்‘ என்று கூறினார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.