தோட்டக்கலை பயிர்களுக்கான நடவு பொருட்கள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தோட்டக்கலை பயிர்களுக்கான நடவு பொருட்கள் பெற பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-20 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 3 அரசு தோட்டக்கலை பண்ணைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தோட்டக்கலை பயிர்களான பழச்செடிகள், மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள் ஆகிய நடவு பொருட்கள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கஜா புயலால் பாதித்து சேதம் அடைந்த பயிர்களுக்கு பதிலாக, மீண்டும் நடவு செய்ய தேவையான நடவு பொருட்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களை, மீண்டும் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தோட்டக்கலை பயிர்களின் நடவு பொருட்கள் பெறுவதற்கு அருகில் உள்ள வட்டார அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் நடவு செடிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பெயர், நிலஅளவு, நில உரிமை விவரங்கள், சாகுபடி செய்ய விரும்பும் பயிர், நடவு செய்ய திட்டமிட்டு உள்ள பருவம், பரப்பு போன்ற விவரங்களை தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் வட்டார அளவில் முன் வரிசைப்படி பதிவு செய்து அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங் கப்படும். இவற்றுக்கு அரசு திட்ட விதிகளுக்கு உட்பட்டு மானியம் வழங்கப்படும்.

இந்த தகவல்களை உழவன் செயலி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்