கரிவலம்வந்தநல்லூர் அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து பலகோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் கருகி நாசம்

கரிவலம்வந்தநல்லூர் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

Update: 2018-12-20 22:00 GMT
சங்கரன்கோவில், 

கரிவலம்வந்தநல்லூர் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

நூற்பாலையில் தீவிபத்து

கரிவலம்வந்தநல்லுார் அருகே உள்ள பருவக்குடி முக்குரோட்டில் ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பஞ்சுகளை சேமித்து வைப்பதற்கான சேமிப்பு கிட்டங்கி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பஞ்சு கிட்டங்கியில் தீ பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து நூற்பாலை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

பலகோடி சேதம்

அருகில் உள்ள ராஜபாளையம் மற்றும் வாசுதேவநல்லுாரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். தீ மேலும் அதிகமாக பரவி கட்டுக்குள் அடங்காததால் சங்கரன்கோவில் மற்றும் பிற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தீ விபத்தின் போது அதிக அளவிலான பணியாளர் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்