வடக்கு பச்சையாறு அணை திறப்பு 110 குளங்கள் பாசன வசதி பெறும்
பிசான சாகுபடிக்காக வடக்கு பச்சையாறு அணை நேற்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 110 குளங்கள் பாசன வசதி பெறும்.
களக்காடு,
பிசான சாகுபடிக்காக வடக்கு பச்சையாறு அணை நேற்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 110 குளங்கள் பாசன வசதி பெறும்.
தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணை உள்ளது. இந்த அணை 50 அடி கொள்ளளவு கொண்டது ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் இந்த அணையானது நிரம்பவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் அணைக்கு பரவலாக தண்ணீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 31.50 அடியாக உள்ளது.
இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் நேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மடத்து கால்வாய், நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
110 குளங்கள்
இதன் மூலம் 9 ஆயிரத்து 593 ஏக்கர் நிலங்களும், 110 குளங்களும் பாசன வசதி பெறும். திறந்து விடப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகள் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.