டெபாசிட் தொகையை திருப்பி தராததால் மானாமதுரை நகர கூட்டுறவு வங்கி முற்றுகை

மானாமதுரை நகர கூட்டுறவு வங்கியை நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2018-12-21 03:45 IST
மானாமதுரை,

மானாமதுரை வைகை ஆற்றுப்பாலம் அருகில் மானாமதுரை நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் நகை கடன், வீட்டு கடன், அடமானம் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் தொகை பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெபாசிட் முதிர்வு தேதி முடிந்த 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 கோடி வரை வழங்க வேண்டியுள்ளது. முதிர்வு தேதி முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், வங்கி பணம் வழங்காததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர். பலமுறை அலைந்தும் பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டுறவு வங்கி முன்பு ஒன்று திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் திடீரென்று வங்கியின் வாசலை மறைத்து உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். ஆனால் வங்கியில் செயலாளர் உள்பட அலுவலர்கள் யாரும் இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கு உரிய பதில் அளிக்காத நிலையில் அவர்கள் நீண்ட நேரம் காத்து கிடந்தனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், வங்கியில் டெபாசிட் செய்த தொகைக்கான தேதி முதிர்வடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தொகை திருப்பி தரப்படவில்லை. இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை நம்பி திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்த முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகிறோம் என்றனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, மாவட்ட நிர்வாகம் போதிய நிதி அளிக்கவில்லை. ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் பணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நிதி உதவி அளித்தால் தான் வழங்க முடியும் என்றனர். எனவே கலெக்டர் இந்த பிரச்சினை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்