படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி,
படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித் சிங் கலோன், கோவிந்தராஜ், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இழப்பீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் ஏற்பட்ட படைப்புழு தாக்குதலால் 80 சதவீதம் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் மக்காச்சோளப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலர் மனு கொடுக்க வருகிறார்கள். அரசால் மூடப்பட்ட ஆலைக்கு ஆதரவாக மனு கொடுப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்லிசேரி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்தவரை மீண்டும் பணியமர்த்தி உள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு அறுவடை நடந்து வருகிறது. ஆகையால் அரசு உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். எட்டயபுரம் தாலுகாவில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. ஆகையால் எட்டயபுரம் தாலுகாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் ஊழல் நடைபெற வாய்ப்பு ஏற்படும். 2018-19-ம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
தடுப்பணை
புதியம்புத்தூர், மேலமடம், நடுவக்குறிச்சி பகுதியில் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஓடை தற்போது தூர்வாரப்பட்டு உள்ளது. சடையநேரி கால்வாயில் இருந்து புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் 100 கனஅடி தண்ணீர் கூட வரவில்லை. ஆகையால் ராமசுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மதகில் இருந்து சுமார் 400 மீட்டருக்கு கால்வாயின் நடுவில் தடுப்பு அமைக்க வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடையில் அங்கமங்கலம் அருகே தடுப்பணை அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மணிமுத்தாறு அணை
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில் 3, 4-வது ரீச்சில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வரும். தற்போது 445 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் ஜனவரி மாதம் வரை திறக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கூடுதல் மழை பெய்தால் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை ரூ.277 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் கம்பு, வேர்க்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.32 கோடி வந்து உள்ளது. மேலும் சில பயிர்களுக்கு காப்பீடு தொகை வர வேண்டி உள்ளது. தற்போது பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மக்காச்சோளத்துக்கு 23 சதவீதம் விவசாயிகள் மட்டுமே பிரீமியம் செலுத்தி உள்ளனர். உளுந்து 70 சதவீதம் பேரும், பாசி பயறு 10 சதவீதம் பேரும், எள் 14 சதவீதம் பேரும், வேர்க்கடலை ஒரு சதவீதம் பேரும் காப்பீடு செய்து உள்ளனர்.
மக்காச்சோளம்
தமிழகம் முழுவதும் மக்காச்சோளம் பயிர் படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இழப்பீடு வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கிராமம் வாரியாக மக்காச்சோளம் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அந்த தொழிற்சாலையை சார்ந்து உள்ள குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை அரசு நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த குளத்தையும் தூர்வார அனுமதி அளிக்கவில்லை. ஏற்கனவே கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்தி உள்ளது. அதில் உள்ள வட்டி பணத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் ரூ.11 கோடியில் தூர்வாரவும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2016-17-ம் ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சடையநேரி கால்வாயில் இருந்து அந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் பிரித்து கொடுப்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் கூட்டம் நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க ஐகோர்ட்டு கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி மணல் கடத்தலில் பிடிபடும் வாகனங்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.