சேலம் புதிய பஸ்நிலையத்தில் சிறுவனுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தாயை தாக்கியதால் பரபரப்பு
சேலம் புதிய பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவி சிறுவனுடன் ஓட்டம் பிடிக்க முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மாணவி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் செவிலியர் முதலாமாண்டு, விடுதியில் தங்கி படித்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், பொக்லைன் எந்திர டிரைவருக்கு உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த சிறுவன், உளுந்தூர்பேட்டை பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது மாணவி, சிறுவன் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலாக மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் அவ்வப்போது சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த தகவல் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி, மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அதற்கு மாணவியின் தாயார் உன்னை நான் கல்லூரியில் கொண்டு சென்று விடுகிறேன் என தெரிவித்தார். இதைக்கேட்ட மாணவி, தனது தாயாரிடம், நீங்கள் கொண்டு விடவேண்டாம், நானாகவே சென்று விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். எனினும் தாயார் விடாப்பிடியாக உடன் வருவேன் என்று தெரிவித்தார். இதனால் வேறு வழியில்லாமல் சரி என மாணவி ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே தான் கல்லூரி செல்ல இருக்கும் தகவலை மாணவி தனது காதலனுக்கு தெரிவித்தார். மேலும் காதல் விவகாரம் தாயாருக்கு தெரிந்ததால், சிறுவனை திருமணம் செய்து கொள்ள மாணவி முடிவு செய்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மாணவி எதுவும் தெரியாதது போல் அவருடைய தாயாருடன் சேலம் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தார்.
ஏற்கனவே பஸ்நிலையத்துக்கு மாணவியின் காதலனும் வந்திருந்தார். அங்கு மாணவியும், காதலனும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் மாணவி தனது தாயாரின் பிடியில் இருந்து நைசாக விலகி காதலனுடன் ஓட்டம் பிடிக்க முயன்றார். மகளின் நடவடிக்கையை முழுவதும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த அவர், ஓட்டம் பிடிக்க முயன்ற மாணவியையும், சிறுவனையும் மடக்கி பிடித்தார்.
மேலும் இருவரும் தப்பி ஓடாமல் இருக்க அவர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பள்ளப்பட்டி போலீசார் பார்த்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மாணவி ‘நான் காதலனுடன் தான் செல்வேன்’ எனக் கூறி தனது தாயை தாக்கினார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சிறுவனின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து 2 குடும்பத்தினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதலர்களிடம் போலீசார், நீங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளும் வயதை அடையவில்லை. எனவே நீங்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி அவர்களை பெற்றோர்கள் உடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை ஏற்று சிறுவனும், கல்லூரி மாணவியும் தங்களுடைய குடும்பத்தினருடன் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.