வரும் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் ரூ.2¼ கோடி செலவில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோபி அருகே உள்ள கொளப்பலூரில் புதிய டெக்ஸ்டைல்ஸ் பூங்கா தொடங்க அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.
கோபி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1,840 வீடுகள் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரத்து 800 வீடுகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும். வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சீருடைகள் வழங்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் 122 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய முதல்கட்டமாக 10 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 100 வாகனங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.