தமிழகத்தில் 23,081 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் அமைச்சர் சரோஜா தகவல்

தமிழகத்தில் 23,081 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Update: 2018-12-20 23:00 GMT

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பறையப்பட்டி புதூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:–

தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 81 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக நலத்துறையின் கீழ் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் குறைந்து வருவதால் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தரமான ஆசிரியர்களை கொண்டு இந்த அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்படும். இதற்கு ஏற்றவாறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 54,439 அங்கன்வாடி மையங்கள், 1,499 குறு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு தமிழக அரசு ஸ்மார்ட் போன்களை வழங்கியுள்ளது. இந்த போன்கள் மூலம் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இதில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டம் அவர்களுக்கான சுகாதார திட்டங்கள் அடங்கிய செயலி பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மூலம் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மாற்றுத்திறன் உரிய காலத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி, கல்வி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதன் மூலம் அவர்கள் இயல்பான நிலைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். சமூக நலத்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டு வரும் முன்பருவ பயிற்சி மையங்கள் மூலம் 6,999 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 70 ஆயிரத்து 80 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்