வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம்: கவர்னரின் வாய்மொழி உத்தரவினை செயல்படுத்தக்கூடாது - நாராயணசாமி கண்டிப்பு

வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்கும் கவர்னர் கிரண்பெடியின் வாய்மொழி உத்தரவினை செயல்படுத்தக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி கண்டிப்புடன் கூறினார்.

Update: 2018-12-20 00:13 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி போக்குவரத்து தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். சட்டசபை கமிட்டி அறையில் நேற்று இந்த கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், டி.ஐ.ஜி.சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் வம்சீதரரெட்டி, ரக்சனாசிங், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், முருகையன், தனசேகரன், ராஜசங்கர் வல்லாட், சஜித் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி விளக்கம் கேட்டார். குறிப்பாக உடனடி அபராதம் விதிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தார். ஆவணங்கள் இன்றி வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்காமல் அறிவுறுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த சில நாட்களாக போக்குவரத்து போலீசார் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள், டிரைவிங் லைசென்சு, இன்சூரன்சு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு வருகிறார்கள். அந்த ஆவணங்களை வைத்து இருந்தாலும் காக்க வைக்கப்படுவதாக எனக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்தன.

இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, மரப்பாலம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்களில் செல்வோர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இத்தகைய இடங்களுக்கு சென்று முதலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி தன்னிச்சையாக காவல்துறை தலைவர், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை அழைத்து தக்க ஆவணங்கள் இன்றி வாகனங்களில் வருவோருக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். அதனை ஏற்று கீழ்நிலை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையில் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வாகன விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியதை அறிவுறுத்துவது போலீசாரின் முதல் கடமை. அதற்கு சில காலம் அவகாசம் வழங்கவேண்டும். அபராதம் வசூலிப்பதால் போலீசார் ஆர்வம் காட்டுவதால் போக்குவரத்தை சரிசெய்வதை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.

கவர்னர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று போலீசார் செயல்படக் கூடாது என்று கூறியுள்ளேன். இனிமேல் போலீசார் பொதுமக்களுக்கு தொல்லை தரமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இனியும் கவர்னர் நடவடிக்கை எடுக்க கூறினால் அது எழுத்துப்பூர்வமாக வரவேண்டும் என்று கூறியுள்ளேன். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீசார் 2 மாதம் விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.

இதேபோல் போக்குவரத்து துறையிலும் புதிதாக டிரைவிங் லைசென்சு பெற வருபவர்கள் பெயரில் ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீது கேட்டு வற்புறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்