பொதுத்துறை வங்கிகள் மூலம் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம்; நாராயணசாமி தொடங்கி வைத்தார்

பொதுத்துறை வங்கிகள்மூலம் வீடுகட்ட குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-20 00:10 GMT

வில்லியனூர்,

புதுவை அரசு சார்பில், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ரூ.4 லட்சமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.2 லட்சமும் வீடு கட்டுவதற்கு மானியமாக வழங்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு ரூ. 2 லட்சம் போதாது, கூடுதலாக பணம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் ரூ.2லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை கரியமாணிக்கத்தில் நடந்தது. விழாவிற்கு விஜயவேணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் 2½ ஆண்டுகள் ஆட்சியை கடந்து வந்துள்ளோம். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அரசை நடத்தி வருகிறோம். பல்வேறு வகைகளில் ஏராளமான முட்டுக்கடைகள் போடப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் முறியடித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிகாலத்தில் வாங்கிய கடன்களை அடைத்துக்கொண்டு இருக்கிறோம்.

மத்திய அரசின் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு ஒரு காலத்தில் 70 சதவீதம் மானியம் வழங்கி வந்தது. தற்போது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிதிநிலையை சமாளித்து ஆட்சியை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குடிசை மாற்று வாரிய செயலாளர் ஜவகர், தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மடுகரையில் வெங்கடசுப்பாரெட்டியார் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்