கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக 19 ஆயிரம் பிஸ்கட்டுகளை கொண்டு ரெயில் வடிவில் கேக் தயாரிப்பு
கொடைக்கானலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக 19 ஆயிரம் பிஸ்கட்டுகளை கொண்டு ரெயில் வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக ரெயில் வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரம் பிஸ்கட்டுகளை கொண்டு ரெயில் வடிவத்தில் உருவாக்கி உள்ளனர். இதனை, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
இந்த ரெயில் கேக்கை வடிவமைத்த சமையல் கலைஞர் ரஜத்குமார்ராய் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக, எங்களது நிறுவனம் சார்பில் பல்வேறு வடிவங்களில் கேக்குகளை தயார் செய்து வருகிறோம். இந்த ஆண்டு சற்று மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக, 19 ஆயிரம் பிஸ்கட்டுகளை கொண்டு இந்த ரெயில் வடிவ கேக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எனது தலைமையில் 7 நபர்கள், ஒரு மாத காலம் இதனை உருவாக்கினோம். இதற்காக சுமார் 80 கிலோ அளவிற்கு இனிப்புகள், சாக்லெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் 19 ஆயிரம் பிஸ்கட்டுகள் 70 கிலோ அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ரெயில் வடிவ கேக், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. மேலும் அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.