ரெயில் நிலையங்களை தொடர்ந்து ரெயில்களிலும் `வைபை' வசதி அடுத்த மாதம் அறிமுகம்
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில், ரெயில் நிலையங்களை தொடர்ந்து ரெயில்களிலும் இலவச `வைபை' வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில், ரெயில் நிலையங்களை தொடர்ந்து ரெயில்களிலும் இலவச `வைபை' வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
ரெயில்களில் ‘வைபை’ வசதி
நாட்டின் வணிக நகரமான மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்கும் புறநகர் ரெயில்களில் தினசரி 80 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதேபோல நாட்டின் பல்வேறு இடங்களுக்கு நீண்ட தூர ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களில் இலவச `வைபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரெயில்கள் மற்றும் நீண்ட தூர ரெயில்களில் இலவச வைபை வசதியை அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக புறநகர் ரெயில்களின் ஒவ்வொரு பெட்டிகளிலும் வைபை நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது.
ஜனவரி முதல்...
இதில் முதல் கட்டமாக நீண்ட தூர ரெயில்களில் இந்த இலவச வைபை வசதி அடுத்த மாதம் (ஜனவரி) பயன்பாட்டிற்கு வரும் என்று மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் கிராந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இலவச வைபை மூலம் இணைய சேவையை பெற முடியும்.
இதன்பின்னர் படிப்படியாக மின்சார ரெயில்களிலும் இந்த வைபை வசதி விரிவுபடுத்தப்படும் என்று மேற்கு ரெயில்வே மும்பை கோட்ட வணிக மேலாளர் ஆர்த்தி சிங் பாரிகர் கூறினார்.