ராகுல்காந்தியை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது
ரபலே் போர் விமான விவகாரத்தில் ராகுல்காந்தியை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
ரபலே் போர் விமான விவகாரத்தில் ராகுல்காந்தியை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதாவினர் போராட்டம்
ரபேல் போர் விமான விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாக கூறியும், பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்புவதை கண்டித்தும் நேற்று மும்பையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மெட்ரோ சினிமா தியேட்டர் பகுதியில் இருந்து அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் நோக்கி பா.ஜனதாவினர், ராகுல்காந்திக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
காங்கிரஸ் அலுவலகம் நோக்கி வந்த அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர்.
50 பேர் கைது
இருப்பினும் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி பா.ஜனதாவினர் அவற்றை தள்ளிக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல பரேலில் பா.ஜனதா இளைஞரணி சார்பில் ராகுல்காந்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.