சிவகாசி பகுதியில் விரைவில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் வினியோகம்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு விரைவில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2018-12-19 23:00 GMT
சிவகாசி,

சிவகாசி அருகிலுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:–

இந்த பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட உள்ளது. ரூ.250 கோடியில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர்திட்டம் தொடங்கப்பட்டது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. விரைவில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. அப்போது இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும். பட்டாசு தொழிலுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி தாசில்தார் பரமானந்த ராஜா, சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சங்கரநாராயணன், என்ஜினீயர் நாராயணசாமி, கிராம செயலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வண்ணம் ரூ.3 கோடி மதிப்பிலான இருக்கன்குடி குடிநீர் திட்டத்தை கலெடர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் மக்கள் குறை கேட்டார்அப்போது அவர், சாத்தூர் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இப்போது இருக்கன்குடி நீர்த்தேக்க திட்டம் மூலம் அதிகப்படியாக 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகின்றது. இதனால் குடிநீர் பற்றாக்குறை நீங்கும். மேலும் சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சிகளை இணைத்து கூட்டுக்குடிநீர் திட்டம் துவக்கநிலையில் ஆய்வுபணி முடிந்து நிதி அமைச்சகம் உத்தரவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதுவும் வந்துவிட்டால் சாத்தூரில் புதிதாக கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கொடுக்கப்படும் என்றார்.

மேலும் சாத்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டஉள்ளது, புதிய டெண்டர் விடப்பட்டு விரைந்து பணிகள் முடிக்கப்படும் மேலும் பாதாள சாக்கடைக்கு தோண்டியதால் சாலைகள் பழுதடைந்து இருப்பதால் புதிய தார்ச் சாலைகள் மற்றும் பேவர்பிளாக்கற்கள் அமைக்கவும் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

சந்திரபிரபா எம்.எல்.ஏ.சாத்தூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஒப்பந்ததாரர் சேசப்பன், சாத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்