மதுரை மாநகராட்சி தொகுப்பூதிய பணியாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-19 22:15 GMT

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பூதிப்புரத்தை சேர்ந்த வக்கீல் ராஜசெல்வன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாநகராட்சி சார்பில் ஊதியம் பெற்று ஐகோர்ட்டில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ரீதியில் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள், தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் ஒரு காண்டிராக்டரின் கீழ் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் வித்தியாசம் காணப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் 26 பேர் மதுரை ஐகோர்ட்டுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். 196 ஊழியர்கள் மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், தினக்கூலி பணியாளர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி, புதுக்கோட்டை, காஞ்சீபுரம் ஆகிய நகரங்களில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 725 முதல் ரூ.16 ஆயிரத்து 725 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு ஐகோர்ட்டில் ரூ.18 ஆயிரத்து 843 சம்பளம் வழங்கப்படுகிறது. தொகுப்பூதிய பணியாளர்களின் வேலையை பொருத்தவரை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. ஆனால் சம்பளம் மட்டும் வேறுபடுகிறது.

மதுரை மாநகராட்சியில் அதிக வருமானம் கிடைக்கிறது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதுபோன்ற நிலையில், துப்புரவு பணியாளர்களை பசியோடு வைத்துக்கொண்டு, ஸ்மார்ட் சிட்டியாக்கி பயன் இல்லை.

எனவே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.16 ஆயிரத்து 725–ஐ சம்பளமாக வழங்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து வருகிற ஜனவரி மாதம் 3–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்