ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தாவிட்டால் 3 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் விக்கிரமராஜா பேட்டி

ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தாவிட்டால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விக்கிரமராஜா கூறினார்.

Update: 2018-12-19 22:34 GMT
ஆலந்தூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்-லைன் வர்த்தகத்தில் சில்லரை முதலீட்டாளர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் அமெரிக்க நிறுவனமான ‘வால்மார்ட்’ இந்தியாவில் வேறு ஒரு நிறுவனத்தின் மூலமாக புகுந்து ரூ.500-க்கு பொருட்கள் வாங்கினால் 1 கிலோ நெய், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ எண்ணெய் ஆகியவற்றை ரூ.1-க்கு விற்பதாக கூறி வணிகர்களை அகற்றி தன்னிச்சையாக வாழ அரசு வழிவகை செய்து உள்ளது.

ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தவில்லை என்றால் இந்தியா முழுவதும் உள்ள 7 கோடி வணிகர்களில் 3 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. ஜி.எஸ்.டி.யில் 28 மற்றும் 18 சதவீத வரியினங்களை முழுமையாக அகற்றவேண்டும். 5 மற்றும் 12 சதவீத வரிகளை மட்டும் அமல்படுத்த வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியில் கணக்குகளை வழங்க அரசு அனுமதிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நலனிலும் அரசு அக்கறை காட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்